குமரி மாவட்டம், நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று (ஜூலை.11) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது," கரோனா தொற்று யாரும் கணிக்க முடியாத அளவிற்கு சென்று கொண்டு இருக்கிறது. கரோனாவை ஒழிக்க அடிப்படையான தேவை சுயக்கட்டுப்பாடு.
கரோனா தொற்றால் அமைச்சர்கள், அனைத்து கட்சியினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டியது இல்லை. இதில் அரசியல் செய்யவும் தேவையில்லை.
தமிழ்நாட்டில் வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் திட்டமிட்ட படி நடத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து. முறைப்படி சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது நல்லது. தனியார் பள்ளிகளில் மூன்று கட்டமாக கல்விக் கட்டணத்தை வசூல் செய்யலாம் எனக்கூறி இருப்பது மக்களை நோகடிக்காத வகையில் இருக்க வேண்டும்.
சாத்தான்குளம் காவல் நிலைய விவகாரத்தில் பொதுவாக காவல்துறையினரை குற்றம் கூறுவது தவறு. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த காவல் அதிகாரிகளை மட்டுமே குற்றம் சாட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.