கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்த 12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் தொடங்கியது. இந்நிலையில், இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது.
இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ ப்ளஸில் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது.
இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரரான ஜானி பெயர்ஸ்டோ ரன் ஏதும் அடிக்காமல், தாஹிர் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்துலேயே டக் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேசன் ராய், ஜோ ரூட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இவ்விரு வீரர்களும் இரண்டாவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில், ஜேசன் ராய் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் 51 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து, கேப்டன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில், மோர்கன் 57 ரன்களில் நடையைக் கட்டினர்.
அவரைத் தொடர்ந்து வந்த பட்லர் 18, மொயின் அலி 3, கிறிஸ் வோக்ஸ் 13 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடினார். 79 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 89 ரன்களில் அவர் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் லுங்கி இங்கிடி மூன்று, இம்ரான் தாஹிர், ரபாடா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா அணி 312 என்ற இலக்குடன் பேட்டிங் செய்து வருகிறது. 30வது ஒவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து166 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.