எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை உள்ள நிலையில், அதை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.
இதற்கு ஆதரவாக தமிழ்நாடு அமைச்சர்கள் சிலர் கருத்துத்தெரிவித்தனர். இதனைக் கண்டித்து சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அடுத்த ராமலிங்காபுரம் பகுதியில் எட்டு வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், ஆறாவது நாளாக நேற்று (ஜூன்10) தங்களின் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், "பசுமையை அழித்து போடப்பட உள்ள இந்தச் சாலையை நல்ல திட்டம் என அமைச்சர்கள் பேசியது கண்டிக்கத்தக்கது.
இதுபோன்று பேசிவரும் அமைச்சர்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவாக பேசிய அமைச்சர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்'' எனக் கூறினர்.