திருச்சி, கொள்ளிடம் ஆற்றில், ஸ்ரீரங்கம் அழகிரிபுரம் அருகே கழிவுநீர் கலந்து தெப்பம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் சலவைத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதை கண்டிக்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கொள்ளிடம் ஆற்றில் யாகம் வளர்க்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் முத்து, கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநகர மாவட்ட தலைவர் சந்திர பிரகாஷ், மாவட்ட செயலாளர் லெனின் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனாலும் அதையும் மீறி இந்தப் போராட்டம் நடந்தது.
இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கூறுகையில், மூடநம்பிக்கையை வளர்க்கும் வகையில் தமிழக அரசு மழை வேண்டி யாகம் நடத்துவதை கண்டிக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை எதிர்த்தும் யாகம் நடத்தும் போராட்டம் நடைபெற்றது. அதனால் உடனடியாக தமிழ்நாடு அரசு மழை வேண்டி யாகம் நடத்துவதற்கு முன்பாக கொள்ளிடம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது என்றனர். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தை தொடர்ந்து யாக போராட்டத்தை பாதியிலேயே நிறுத்திக் கொண்டனர்.