ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் அடுத்துள்ள ம. பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவருக்கு கடந்த ஏப்.16ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏப்.17 ஆம் தேதியன்று அவர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார்.
இன்று (ஏப்.23) மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது உடலை மருத்துவமனை நிர்வாகம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
மேலும், ம.பச்சேரி, புதுக்குளம், கழுவன்பொட்டல் உள்ளிட்ட கிராமங்களில் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். சுகாதாரத் துறை அலுவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு கரோனா தடுப்பூசி, மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்தாண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை கமுதிப் பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.