ஈரோடு மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கிடும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பவானி ஊராட்சிக்கோட்டை காவிரிப் பகுதியிலிருந்து ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர்த் திட்டம் நடைபெற்றுவருகிறது.
திட்டப் பணிகள் முடிவுற்று இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் கடந்த சில நாள்களாக ஊராட்சிக்கோட்டையிலிருந்து சோதனை ஓட்டமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் செல்லும் தண்ணீரின் வேகம், அழுத்தம் ஆகியவை குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
இந்நிலையில், ஊராட்சிக்கோட்டையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஈரோடு ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் தண்ணீர் விரயமானது. உடனடியாகத் தண்ணீர் நிறுத்தப்பட்டு, தண்ணீர் விரயம் தடுக்கப்பட்டதுடன் உடைப்பு ஏற்பட்ட குழாயும் சீரமைக்கப்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன் இதேபோல் பவானி பிரதான சாலைப் பகுதியிலுள்ள ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமான நிலையில், தற்போது இரண்டாவது முறையாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் விரயமானது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.