”முதலமைச்சர் குறித்து விமர்சிக்க ராசாவிற்கு தகுதி இல்லை” என்று முன்னதாக அமைச்சர் உதயகுமார், திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான ஆ.ராசாவை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் அணையப்போகும் திரி கடைசி நிமிடத்தில் கூடுதல் வெளிச்சம் காட்டுவதுபோல், அமைச்சர் உதயகுமாரின் உளறல் உள்ளதாகவும் விரைவில் அமைய இருக்கும் திமுக ஆட்சியில் தகுதியற்றவர்களின் தகுதி தீர்மானிக்கப்படும் என்றும் ஆ. ராசா பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தான்குளத்தில் தமிழ்நாடு காவல் துறை நிகழ்த்திய இரட்டைக் கொலையில் மூச்சுத் திணறலால் ஒருவரும், உடல்நலக்குறைவால் ஒருவரும் இறந்தார்கள் என காவல் துறையை கையில் வைத்துள்ள பொறுப்புள்ள முதலமைச்சரே அறிவித்தது கொலையை மறைக்க சொல்லப்பட்ட பச்சைப் பொய் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்று குறிப்பிட்டு, இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என நான் சொன்ன கருத்திற்கு பதிலளிப்பதாக நினைத்துக் கொண்டு, தன் தற்குறித்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் அமைச்சர் உதயகுமார்.
மேலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு கண்ணாடியிழைக் கம்பி (Optic Fiber Cable) இணைப்புகள் அமைப்பதற்காக சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்ட திட்டத்திற்கான ஒப்பந்த நிபந்தனைகள், முறைகேடு செய்வதற்கு ஏதுவாக தளர்த்தப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக உறுதி செய்த மத்திய அரசு, அந்த ஒப்பந்தத்தையே ரத்து செய்திருப்பது உதயகுமாரின் நேர்மைக்கு கொடுக்கப்பட்ட பட்டயம்.
என் மீதான வழக்கை நானே எதிர்கொண்டு சிபிஐயின் குறுக்கு விசாரணையையும் எதிர்கொண்டு வழக்கை வென்றவன். அணையப்போகும் திரி கடைசி நிமிடத்தில் கூடுதல் வெளிச்சம் காட்டுவது மாதிரி உதயகுமாரின் உளறல் உரத்து ஒலிக்கிறது. விரைவில் அமைய இருக்கும் தி.மு.க. ஆட்சியில் தகுதியற்ற இவர்களின் தகுதி தக்க நேரத்தில் தீர்மானிக்கப்படும். அதுவரையாவது இவர்கள் அமைதி காப்பது அவர்களுக்கு நல்லது” எனத் தெரிவித்துள்ளார்.