இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா கிராமப் புறங்களில் படுவேகமாகப் பரவி - சென்னையில் தொடருவது குறித்தும், இதைத் தடுத்து நோயால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ வல்லுநர்களுடன் நடத்திய காணொலிக் காட்சி கலந்துரையாடலின்போது, அவர்கள் தெரிவித்த ஆலோசனைகள் தமிழ்நாடு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அவற்றை முதலமைச்சர் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
அதன்படி மருத்துவ உள்கட்டமைப்புகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும். ஆகவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் வழிகாட்டுதல்களைப் பொதுவானவையாகக்கொண்டு - தமிழ்நாடு கரோனா தொற்று சூழ்நிலைக்கு ஏற்ப அரசே நோய்த் தடுப்பு- சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான, செயல்முறைக்கேற்ற முடிவுகளை எடுக்க வேண்டும்.
மேலும் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தொற்று ஏற்பட்ட நிலையிலும், சமூகப் பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ளத் தனியாக ஒரு வல்லுநர் குழுவை நியமித்து, அறிக்கை பெற்று உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொலைநோக்குச் சிந்தனையோடு, கரோனா மருத்துவக் கொள்கை ஒன்றை வகுத்துச் செயல்படுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் நோய்ப் பரவலைப் போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கரோனா மருத்துவக் கழிவுகளைச் சரியான முறையில் பாதுகாப்புடன் அகற்றி, அறிவியல்ரீதியாக அவற்றை அழித்து, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவதையும் அழிப்பதையும் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் எச்சில் துப்புவதைத் தவிர்த்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற முற்றிலும் புதிய வாழ்க்கை நடைமுறைக்கு மக்கள் தங்களை படிப்படியாகத் தயார்செய்து கொண்டுவருவது வரவேற்கத்தக்கது.
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, காசநோய் போன்ற நோயை அறவே தமிழ்நாட்டிலிருந்து போக்கிட ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்தை உருவாக்கிட வேண்டும். அதேபோல் கரோனா தவிர, பிற நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை.
புதிய பிரச்னைகள் உருவாகி, இக்கட்டான சூழல் நிலவுகிறது. பிற நோய்ப் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தடையின்றி சிகிச்சை பெற ஒரு பிரத்யேக “செயல் திட்டம்” உருவாக்கி, அதை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிறைவேற்றிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.