இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இணையவழியில் வகுப்புகள் நடத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ள அதிமுக அரசு, திரைமறைவில் அந்த வகுப்புகளை தாராளமாக அனுமதிக்கும் உள்நோக்கத்துடன் ஒரு குழுவை நியமித்து, அதில் ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், மாணவர் பிரதிநிதிகளையும் புறக்கணித்திருக்கிறது. மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கிள்ளுக் கீரையாக எண்ணி, மனம் போன போக்கில் விளையாடும் அதிமுக அரசின் இந்தச் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மாணவர்களில், 60 விழுக்காடு பேர் கிராம பகுதிகளில் உள்ளனர். இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன் போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை. இணையதள வசதிகள், “வை ஃபை” மற்றும் “பிராட்பேண்ட்” வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை. அடிப்படை உள்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது. கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களுக்கும் - நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கும் பேராபத்தானது.
கல்வியின் தரம் ஒருபுறமிருக்க, இணையவழிக் கல்வி மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும். நீண்ட நேரம் அலைபேசி திரை அல்லது மடிக்கணினி திரையை பார்ப்பதால், அவர்களின் கண் பார்வையில் குறைபாடுகள் நேரலாம். இணையவழிக் கல்வியைப் பொறுத்தவரை, மாணவர்களும் - பெற்றோர்களும் முக்கியப் பங்குதாரர்கள். ஆகவே இதனால் ஏற்படும் கலாசார சீரழிவுகள், ஆபத்துகள், டிஜிட்டல் உள்கட்டமைப்புக் குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணவர்களிடமும், பெற்றோரிடமும் கருத்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
“சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்”; ஆகவே இணையவழி உள்கட்டமைப்பு முழுமையாக இல்லாத தமிழ்நாட்டில், ‘நேரடியாக கற்றல் - கற்பித்தல்’ என்ற வகுப்பறைச் சூழல் மட்டுமே கல்வி முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். “இணையவழிக் கல்வி முறை, நிச்சயமாக வகுப்பறைக் கல்விக்கு மாற்று இல்லை; நிழல் நிஜமாகிவிடாது” என்பதை அதிமுக அரசு உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.