முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ், சட்டமன்றத்தில் கும்பகோணம் வட்டாரத்தில் வெற்றிலை சிறப்பு மையம் அமைத்திட அறிவிப்பு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, அதற்கான இடத்தினைத் தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், வேளாண்மை இணை இயக்குநர் ஜஸ்டின் ஆகியோர் மருதாநல்லூரில் உள்ள அரசு விதைப்பண்ணையில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர், ஆடுதுறை அரசு தோட்டக்கலைப்பண்ணையை ஆய்வு செய்து பண்ணை மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சுமார் 3 ஏக்கர் பரப்பில் வெற்றிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி, செயல்முறை விளக்கம், ஒருங்கிணைந்த பூச்சி, ஊட்டச்சத்து மேலாண்மை, அறுவடை முறைகளில் நவீனத் தொழில் நுட்பங்கள் போன்றவற்றை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ரவிச்சந்திரன், கும்பகோணம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் திருச்செல்வன் ஆடுதுறை, அரசு தோட்டக்கலைப்பண்ணை தோட்டக்கலை அலுவலர் செல்வி, ஜோதிலெட்சுமி , உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.