திருவண்ணாமலை முழுவதும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்டதால் நகரப்பகுதிகளில் அனைத்து மளிகை கடை, காய்கறி கடை, துணிக்கடை உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களும் முழு மனதாக வணிகர்களால் மூடப்பட்டன. கரோனா அச்சம் காரணமாக பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், அனைத்து பணியாளர்களுக்கும் உயிர் பயம் ஏற்பட்டுள்ளதால் எந்த ஒரு வணிக நிறுவனமும் திறக்காமல் தாங்களாகவே முன்வந்து மூடி முழு ஊரடங்கு ஒருமனதாக கடைப்பிடிக்கப்பட்டது.
பெட்ரோல் நிலையங்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் ஆள் நடமாட்டமின்றி சாலைகள் வாகனங்கள் குறைவான எண்ணிக்கையில் செல்வதால் வெறிச்சோடி காணப்பட்டது.
நகரப்பகுதிகளில் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி, காவல் துறையினர் விசாரித்த பின்னரே அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர், வெளியூர்வாசிகள் என்று கண்டறியப்பட்டால், அவர்களை காவல் துறையினர் நகருக்கு உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். சாலைகள் வெறிச்சோடி காணப்படுவதை சாதகமாக பயன்படுத்தி, டிராக்டர்கள் மூலம் நகரத்தில் உள்ள அனைத்து சாலைகளுக்கும் கரோனா வைரஸ் தொற்று தடுக்கும் விதமாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை நகராட்சி ஊழியர்கள் செய்தனர்.