அரியலூர் மாவட்டம், பெரியதிருகொணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மாலா தம்பதி. இவர்களுக்கு பாலகிருஷ்ணன் (17) என்ற மகனும் கிருஷ்ணவேணி (15) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே வாய் பேச முடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளிகள்.
கிருஷ்ணவேணி பத்தாம் வகுப்பும் பாலகிருஷ்ணன் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வும் எழுதி உள்ளனர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பள்ளி விடுமுறையில் வீட்டில் இருக்கும் சகோதரன் சகோதரி இருவரும் விடுமுறையை பயனுள்ளதாக்கும் வகையில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைய முயற்சி மேற்கொண்டனர்.
இதில், கரோனா தொற்று குறித்தும், கரோனா தடுப்பு பணியில் அயராது பாடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்களை போற்றும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளனர். அதில், முக்கியமாக கை கழுவும் முறைகள், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணியவேண்டும், கரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது.
இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த ஓவியங்களை தத்துரூபமாக வரைந்துள்ளனர். நாற்பது அடி நீளமுள்ள காகிதத்தில் தனது தாயாரின் உதவியுடன் தன் எண்ணத்திற்கு ஏற்றவாறு இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி சகோதரன், சகோதரியின் இந்த முயற்சியை கிராம மக்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.