பட்டியலின மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேவேந்திரகுல வேளாளர் பசுபதி பாண்டியன் கூட்டமைப்பு சார்பில் இன்று (நவம்பர் 22) புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.
அதற்காக அந்த கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் பார்வதி சண்முக சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறி மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து அறையிலேயே காவல் துறையினர் தங்க வைத்திருந்தனர்.
இது குறித்து தகவலறிந்து 200க்கும் மேற்பட்ட இந்த கூட்டமைப்பை சேர்ந்த இளைஞர்கள், தனியார் விடுதி முன்பு குவிந்தனர். இதனால் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்ல முயன்றபோது இந்த கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட அந்த கூட்டமைப்பு சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.