தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய்ப்பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது. இவற்றில் பெரியகுளம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் பாதிப்பு அதிகம் உள்ளது.
இந்நிலையில் பெரியகுளம் தென்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. இவர் தேனி ஆவின் தலைவரும், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-யின் சகோதரருமான ஓ.ராஜாவிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கார் ஓட்டுநருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதால், ஓ. ராஜா அவரது உறவினர்கள், கார் ஓட்டுநருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், ஓ. ராஜா, அவரது மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இருவர் உள்பட நான்கு பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து ஓ. ராஜா, அவரது மனைவி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மற்ற இருவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சோக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஓ. ராஜா வீடு அமைந்துள்ள பெரியகுளம் தென்கரையில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புக் கட்டைகள் அமைத்து மூடப்பட்டன. மேலும் பெரியகுளம் நகராட்சி சுகாதாரத் துறையினர் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.