உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 22ஆவது லீக் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர் ரோகித் ஷர்மா அதிரடியாக ஆடினார். பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆமிரின் ஓவரைத் தவிர ஏனைய பந்துவீச்சாளர்களின் ஓவரை பவுண்டரிக்கு பறக்கவிட்டார்.மறுமுனையில், தொடக்கத்தில் சற்று நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல், பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவ்விரு வீரர்களும் நேர்த்தியான ஷாட்டுகளை விளையாடி அணியின் ரன்களை குவித்தனர். அப்போது கே.எல்.ராகுல் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 136 ரன்களை குவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து. அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோலி உடன் ஜோடி சேர்ந்த ரோகித் ஷர்மா சிறப்பாக பேட்டிங் செய்தார். ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து தனது ஃபார்மை மெருக்கெற்றினார். இந்தத் தருணத்தில், 30ஆவது ஓவரில் ரோகித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 24ஆவது சதத்தை எட்டினார்.
இந்த சதத்தை விளாச அவர் 85 பந்துகளை மட்டுமே எடுத்துக் கொண்டார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து இரண்டு சதம் விளாசிய இந்திய வீரர் என்ற புதிய சாதனையை இதன்மூலம் படைத்துள்ளார். முன்னதாக, ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோகித், 140 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 14 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.