உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் விளையாடிவரும் ஆஃப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ்,பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட 10 அணிகள் தங்களுக்கான ஜெர்சியை அணிந்துக் கொண்டு பங்கேற்று வருகின்றன.
இதில், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடுகிறது. அதேபோல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேச ஆகிய மூன்று அணிகள் பச்சை நிற ஜெர்சியை அணிந்து விளையாடுகிறது.
இந்நிலையில், ஒரே நிற ஜெர்சியுடன் இரு அணிகள் மோதினால், அந்தப் போட்டியைக் காணும் ரசிகர்களுக்கு குழப்பம் வரும் என்பதற்காக ஜெர்சி நிறத்தில் புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அணி, வரும் ஜூன் 30ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ள போட்டியில் நீல நிற ஜெர்சிக்கு பதிலாக காவி நிற ஜெர்சியில் விளையாடும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த ஜெர்சியின் வடிவம் குறித்த தகவல் வெளியாகும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆனால், ஜூன் 22 ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும், ஜூலை 6ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும், இந்திய அணி வழக்கம் போல நீல நிற ஜெர்சியிடன் விளையாடவுள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி, சிவப்பு நிற ஜெர்சியுடனும், இலங்கை அணி மஞ்சள் நிற ஜெர்சியுடனும் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மட்டுமே மாற்று ஜெர்சி இல்லாமல் இந்தத் தொடரில் விளையாடுகிறது.