கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுருக்குமடி வலைக் கொண்டு மீன் பிடிப்பதை மாற்றி, அரசால் வழங்கப்பட உள்ள வேறு திட்டத்தில் ஏதேனும் ஒன்றில் பயன்பெற முன்வந்துள்ள மீனவர்களை மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேரில் சந்தித்து, சுருக்குமடி வலை ஒப்படைப்பு செய்ய முன்வந்துள்ள மீனவர்கள் தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கூறுகையில், "கடலூர் மாவட்டம் 57.5 கிமீ நீள கடற்கரை, 49 மீனவ கிராமங்களைக் கொண்டது. இவற்றில் சுமார் 49 ஆயிரம் மீனவ மக்கள் வசித்து வருகின்றனர்.
இதில், 24 ஆயிரத்து 480 மீனவர்கள் நேரடியாக மீன்பிடித் தொழிலும் 15 ஆயிரம் மீனவ மகளிர் மீன்பிடிப்பு சார்ந்த தொழிலையும் செய்துவருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் தற்சமயம் 250 மீன்பிடி விசைப்படகுகள், 2 ஆயிரத்து 950 இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி நாரிழை படகுகள், 868 நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் நடக்கிறது.
கடற்கரையை ஒட்டி வாழ்கின்ற ஏழை மீனவ மக்கள் கடல் வளத்தை மட்டுமே தங்களது வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 40 விழுக்காடு மானியத்துடன் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் வழங்குகிறது.50 விழுக்காடு மானியத்துடன் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மாநில அரசு திட்டத்தின் கீழ் செவுள் வலை, தூண்டில், ஆழ்கடல் மீன்பிடிப்பு படகுகள் வழங்கப்படும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள இழுவலை படகுகளை ரூ.15 லட்சம் மானியத்தடன் செவுள் வலை படகுகளாக மாற்றும் திட்டம், உள்ளிட்ட மூன்று மாற்று திட்டங்கள் வகுக்கப்பட்டு மீனவர்கள் பயனடையும் விதமாக உள்ளன.
மேலும், சுருக்குவலை படகுகளில் முதற்கட்டமாக ஆறு கோடியே 65 லட்சத்து மதிப்பிலான 19 சுருக்குவலை படகுகள், ரூ 7.20 கோடி மதிப்பிலான 24 சுருக்குமடி வலைகளையும் ஆக மொத்தம் ரூ13.85 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்ளன. இத்திட்டங்களை மீனவர்கள் பயன்படுத்தி பயன்பெற வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வின்போது உதவி இயக்குநர் (மீன்வளம்) ரம்யா லட்சுமி, ஆய்வாளர் மணிகண்டன், சார் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றம் பலர் உடனிருந்தனர்.