12ஆவது ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் தகுதிச் சுற்றுப் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, பேட்டிங் செய்த சென்னை அணி மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அணியில் டு பிளசிஸ்(6), ரெய்னா (5), வாட்சன்(10), முரளி விஜய் (26) ஆகியோர் மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், சென்னை அணி 12.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ரன்களை எடுத்திருந்தது.
பின்னர் ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடிய ராயுடு - தோனி, கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்களை சேர்த்தது. குறிப்பாக, தோனி மலிங்கா வீசிய 19ஆவது ஓவரில் பேக் டூ பேக் இரண்டு சிக்சர்களை விளாசினார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. தோனி 37 ரன்களுடனும், ராயுடு 42 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ராகுல் சஹார் இரண்டு, குருணல் பாண்டியா , ஜெயந்த் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.