தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனோ பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தனது முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொதுபோக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுள்ளது. குறிப்பாக அரசு பேருந்துகள் இயங்காது. மருத்துவம் சார்ந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மட்டும் இயங்கும். காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் , ஜவுளி கடைகள் போன்றவைகள் முற்றிலும் செயல்படாது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரையில் கரோனா பாதிப்பு என்பது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மூலமாக தான் பரவுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு அதன் மூலம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கை மீறுவோர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.