மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி வசூல் செய்வதாகக் கூறி மின் வாரியத்தைக் கண்டித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாலபாரதி, "நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் எந்தவிதமான வாழ்வாதாரமும் இல்லை. வேலை வாய்ப்பும் இல்லாமல் மக்கள் வீடுகளில் முடங்கிக்கிடக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசு மின்கட்டணத்தை கடுமையாக உயர்த்தி வசூலித்துவருகிறது.
நான்கு மாதங்கள் வரை மொத்தமாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நான்கு மாதங்களுக்கான மின் கட்டணத்தை மொத்தமாக வசூலிக்கும்போது 500 யூனிட் மின்சாரம் வரை பயன்பாட்டுக்கு பணம் கட்ட வேண்டியுள்ளது. இதன்மூலம் சாதாரண காலங்களில் இலவசமாக பெற்றுவந்த 100 யூனிட் மின்சாரம், நெருக்கடி மிகுந்த இந்த கரோனா காலத்தில் கிடைக்காமல் போகிறது.
மாநில அரசு கரோனா கால நிவாரணமாக ரூபாய் ஆயிரத்தைக் கொடுத்துவிட்டு மின்கட்டணமாக ரூ.10 ஆயிரம் வரை வசூலிப்பது, நிவாரணம் கொடுத்ததை அர்த்தமில்லாமல் மாற்றுகிறது. எனவே, கரோனா காலத்தில் அரசு மின் கட்டணச் சலுகை வழங்க வேண்டும். அல்லது இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறினார்.