உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளில் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஹாங்காங்கில் நடைமுறையில் உள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சில தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உள்ளூர் சுற்றுலப்பயணிகள் 30 பேர் வரை குழுக்களாகவும், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு 50 பேர் வரை கூடவும் அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் நான்கு மற்றும் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதும், சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணம் முழுவதும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது போக்குவரத்து சேவைகளில் 50 விழுக்காடு இடங்களை மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் திருமணங்களுக்கான புதிய விதிகள் விருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. விழாக்களில் உணவு மற்றும் பானங்கள் வழங்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஹாங்காங்கில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்து 265 ஆக உள்ளது. இதில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.