கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள கிணத்துக்கடவு சிக்கையன்புதூரில் மே மாதம் 26ஆம் தேதியன்று சமூக விரோதிகள் சிலர் கேரளாவிற்கு மணலை லாரியில் கடந்த முயன்றுள்ளனர்.
அது குறித்து தகவலறிந்த கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுகவினர் விரைந்து வந்து அந்த கும்பலைப் பிடித்துள்ளனர். மேலும், அங்கேயே அமர்ந்த திமுகவினர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம் இருவரும்தான் இந்த வளக் கொள்ளைக்கு காரணமென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அறிய முடிகிறது.
திமுகவினரின் ஆர்ப்பாட்டம் குறித்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி அவதூறு பரப்புவதாக கூறி சட்டப்பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம், கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், உதவியாளர் கீர்த்தி ஆனந்த், திமுக ஒன்றிய செயலாளர் துரை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கைது நடவடிக்கையை கண்டித்து கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவர் தமிழ்மணி, "கோவை மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவின்பேரில் திமுகவினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்குகளை பதிவுசெய்து, சிறையிலடைத்து வருகின்றனர்.
இதனை கண்டித்து கடந்த 5 நாள்களுக்கு முன்னர் திமுக தலைவர் ஸ்டாலின் கூட இது தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். கடந்த சில நாட்கள் முன்பு கிணத்துக்கடவு பகுதியில் கனிம வளங்களை கடத்த முயன்ற வாகனங்களை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அவரது உதவியாளர் மீது பொய் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதை கண்டித்து கோவை வடக்கு, தெற்கு நகரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது சிறையில் அடைக்கும் நோக்கத்துடன் வழக்குகளை ஆளுங்கட்சியினர் பதிவு செய்துள்ளனர். இதனை கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், திமுகவினர் மீது அமைச்சர் பொய் வழக்கு தொடர்ந்தால் தலைமை அனுமதியுடன் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்" என தெரிவித்தார்.
முன்னதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சார் ஆட்சியரிடம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி மணல் கொள்ளையடிக்கப்பட்டு லாரிகளில் கடத்தப்படுவதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் மனுவொன்றை அளித்தார்.