கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று பரவல் காரணமாக உலகத்தில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பலர் இந்தியாவிற்குத் திரும்ப முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இந்நிலையில், கடந்த மே மாதம் ஏழாம் தேதிமுதல் வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மத்திய அரசு வந்தே பாரத் என்ற திட்டத்தின் மூலம் அழைத்துவருகிறது.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் மே ஏழாம் தேதிமுதல் ஜூன் 24 தேதிவரை அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, துபாய், ஜப்பான், கொரியா, மியான்மர், மஸ்கட், பிலிப்பைன்ஸ் போன்ற 15 நாடுகளிலிருந்து 16 ஆயிரத்து 113 பேர் வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனைசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களில் கரோனா தொற்று இல்லாதவர்கள் 14 நாள்களுக்குப் பிறகு அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தல் காலம் முடியாதவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். 308 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 135 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் முகாமில் தங்கியிருந்தவர்களுக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், குவைத்திலிருந்து வந்தவர்களில் 13 பேர், பக்ரைனிலிருந்து வந்தவர்களில் ஐந்து பேர், சிங்கப்பூரிலிருந்து வந்தவர்களில் இரண்டு பேர் என 20 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 328 ஆக உயர்ந்தது.
அதுபோல் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திற்கு பல்வேறு நகரங்களிலிருந்து 811 விமானங்களில் 49 ஆயிரத்து 805 பேர் வந்தனர். இவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
உள்நாட்டு முனையத்தில் வந்தவர்களில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 99 ஆக உயர்ந்தது. இவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.