புதுச்சேரி மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கிருஷ்ணாராவ் வெளியிட்டுள்ள வீடியோவில், புதுவை மாநிலத்தில் கடந்த ஒரு நாளில், 498 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 32 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 18 பேர் புதுச்சேரி கதிர்காமம் அரசு கோவிட் மருத்துவமனையிலும், 13 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாகி மருத்துவமனையில் ஒருவரும் கோவிட் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதில் 20 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள் ஆவர்.
மேலும், புதுவையில் தற்போது, கதிர்காமம் அரசு பொது மருத்துவமனையில் 323 பேரும், ஜிப்மரில் 123 பேரும், கோவிட் கேர் சென்டரில் 31 பேரும், வெளி மாநிலத்தில் 2 பேர் என மொத்தம் 479 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர, காரைக்காலில் 8 பேர், ஏனாமில் 14 பேர், மாகியில் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 41 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 510 பேர் தற்போது கோவிட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக தொற்று ஏற்பட்ட 32 பேரில் 60 வயதிற்கு மேற்பட்டோர் 2 பேரும், 18 வயதிற்கு கீழ் 5 பேரும், 18 வயது முதல் 60 வயதிற்குள் 25 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் மட்டும் கரோனா பாதிப்பை ஏற்படுத்தும் என அலட்சியம் காட்ட வேண்டாம். எந்த வயதுடையவரையும் கரோனா வைரஸ் தாக்கும். எனவே பொதுமக்கள் தகுந்த இடைவெளி, தனி மனித சுகாதாரம், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.