தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. சுகாதாரம், மருத்துவம், காவல், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறை சார்ந்த 10 பேர் சுழற்சி முறையில் 24மணி நேரமும் இந்த கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த பயிற்சி அரசு மருத்துவர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் பணியாற்றிய அலுவலர்கள் வெளியேற்றப்பட்டு கரோனா கட்டுப்பாட்டு அறை மூடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டதால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மற்றும் கூட்டரங்கம் என அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டன
இரண்டு மற்றும் மூன்றாம் தளங்களில் உள்ள அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பின்னர்தான் அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் என்பதால் புகார் அளிக்க வந்த பொதுமக்கள் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுச் செல்லுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தினர்.