தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை, பரிசோதனை குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் பரிந்துரைப்படி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற மற்ற நோயாளிகளுக்கு தனி வழியும், தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தனியான நுழைவு பாதை, என தனித்தனியாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பாதித்த 500 நபர்களுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் அளவு போதுமான இடவசதி அமைக்கப்பட்டுள்ளது.
16 வென்டிலேட்டர் வசதியும் உள்ளது. மேலும் தொற்று குறித்து பரிசோதனை செய்ய ஏப்ரல் 10-ஆம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 170 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் 8 ஆயிரத்து 821 பேருக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த 5,570 பேருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 513 பேருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த 266 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 36 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் 10 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் எட்டு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கரோனா வைரஸ் தொற்று பிரிவில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தனியாக இரண்டு தங்கும் விடுதிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.