விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா நோய்க் கிருமியின் பரவல் அதிகரித்துவரும் நிலையில் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுத் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
"விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய்க்கிருமித் தொற்றால் 80 நாள்களில், ஐந்து நபர்கள் இறந்துள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களது பாதுகாப்பைத் தாங்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இத்தொற்று நோயை முற்றிலும் ஒழிக்க, அதற்குத் தேவையான தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட பொதுமக்களும், வணிகர்களும் கீழ்காணும் அறிவுரைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும்.
- சென்னை, புறநகர் மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகைதரும் நபர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும். அப்படி அனுமதியின்றி வரும் நபர்களின் வாகனங்கள் பறிமுதல்செய்யப்படுவதோடு பிரத்யேகமாக தனிமைப்படுத்தப்படுவார்கள்.
- வணிகர்கள் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை மட்டுமே தங்கள் பொருள்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியில் சென்றுவருவதை தவிர, இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல்செய்யப்படும்.
எனவே 144 ஊரடங்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசின் உத்தரவை மதித்து கோவிட்-19 நோய் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மேற்கொண்ட அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும். இதனை மீறி நடப்பவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.