”என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் மக்கள் அதனை உண்ண முடியாது என்பதுதான் உண்மை. காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பண்டங்கள், விவசாய நிலங்களில் இருந்து பொது மக்களுக்கு கிடைக்கும்படியாக கொண்டு செல்லும் எங்கள் பணியை மக்களும் அரசும் அங்கீகரிப்பதில்லை” எனக் கவலையுடன் பேசுகின்றனர், சென்னை நகருக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்கள்.
கரோனா தொற்று பரவி வரும் தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பண்டங்களையும், இவர்கள் சென்னை நகருக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, அவர்களை ஏதோ கரோனா தொற்று பரப்ப வந்தவர் போல ஊர் மக்கள் நடத்துவதாக லாரி ஓட்டுநர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
இது குறித்துப் பேசிய லாரி ஓட்டுநர்கள், "எங்களது பணிகள் நின்று விட்டால் சென்னையில் உள்ள மக்களுக்கு உணவுப் பண்டங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை எவ்வாறு கிடைக்கும் என்பது பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
கரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோர் மட்டுமே முன் நிறுத்தப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இணையாக தொற்றைப் பற்றி கவலைப்படாமல், உயிரைப் பணயம் வைத்து லாரிகளை ஓட்டி, மக்களை பட்டினியாகக் கிடக்காமல் காக்கும் எங்களை காக்க அரசு என்ன செய்துள்ளது?
அரசு அலுவலர்கள், எங்களுக்கும் ஃபேஸ் ஷீல்ட் எனப்படும் பாதுகாப்புக் கவசங்களை வழங்க வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகளை சென்னைக்கு கொண்டு சேர்க்கும் எங்களை தீண்டத்தகாதவர்கள்போல பார்க்கும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
எங்களின் பணிகள் நின்று விட்டால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்போருக்கு உண்ண உணவு கிடைக்காது என்பதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க, அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நாங்களும் கரோனா காலத்தில் முன்களப் பணியாளர்கள் தான் என்பதை, மக்கள் மத்தியில் புரிய வைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உணவுப் பண்டங்களை கொண்டு வரும் லாரி ஓட்டுநர்களின் கோரிக்கைகளிலும் நியாயம் இருப்பதை அரசு உணர வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : வீரப்பன் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் பதவி உயர்வுக்கு தற்காலிகத் தடை!