மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் தாயார் நல்லம்மாள் (67), தங்கை லட்சுமி (47) ஆகியோர் கரோனா தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இருவருமே சர்க்கரை நோயாளிகள். மேலும் கூடுதலாக தாயார் நல்லம்மாள் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைந்துள்ள அரசு நெஞ்சக நோய் தடுப்பு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தில் தனது தாயார், தங்கையை சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு ஒன்பது நாள்கள் தங்கி, சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் தற்போது அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கூறுகையில், "கரோனா தொற்று ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் இதுபோன்ற நல்லதொரு சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அதற்கான சூழலை முழுமையாக உருவாக்கவே பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.
பொதுவாக தொற்றாநோய்களைவிட, தொற்றுநோய்களைக் கையாள்வதில் தனியார் மருத்துவர்களைவிட அரசு மருத்துவர்கள் திறனும், அனுபவமும் அதிகம் பெற்றவர்கள். எனவே கரோனா போன்ற தொற்றுநோய்களுக்கு எதிரான போரில் அரசு மருத்துவமனை மிகச்சிறப்பான பங்களிப்பினைச் செய்யமுடியும்.
நிர்வாகமும் அரசின் கொள்கைசார்ந்த முடிவுகளும்தான் நாம் இன்று சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணம். அப்பிரச்னைகளை எதிர்கொள்ள அரசியல் வழியிலான அழுத்தங்களைத் தொடர்ந்து உருவாக்குவோம்.
அதே நேரம் பல்வேறு வகையான போதாமைகளுக்கு நடுவிலும் மிகச்சிறப்பாக பங்காற்றிக்கொண்டிருக்கும் மருத்துவத் துறையைச் சார்ந்த அனைத்துப் பணியாளர்களுக்கும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.