உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தமிழ்நாட்டில் தீவிரமாக பரவிவருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளை சிறைச்சாலையில் உள்ள விசாரணைக் கைதி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நோய் பரவலை தடுத்திட வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் வெளியேற்றப்பட்டு அலுவலகம் மூடப்பட்டன. இதேபோல உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் நபர் ஒருவருக்கும் இன்று கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அதே வளாகத்தில் இயங்கிவரும் வட்டார போக்குவரத்து அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம் ஆகியவைகள் மூடப்பட்டன.
முன்னதாக இந்த அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின் உத்தமபாளையம் பேரூராட்சி சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்தனர்.
நோய்த் தொற்றால் இந்த அலுவலகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டன. மேலும், முக்கிய அரசுத் துறை அலுவலகங்கள் கரோனா நோய்த் தொற்றால் தொடர்ச்சியாக மூடப்பட்டு வரும் சம்பவம் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.