வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பாலாஜி நகர் பகுதயைச் சேர்ந்த 22 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு அடுத்த மாதம் பிரசவம் நடைபெற இருந்த நிலையில், பிரசவ வலி காரணமாக சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது அவருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து இன்று பிரசவத்தின்போது தாயும் சேயும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் செல்வி கூறுகையில், "அடுத்த மாதம் பிரசவம் நடைபெற இருந்த நிலையில், கர்ப்பிணிக்கு ரத்த அழுத்தம், பிரசர் அதிகமானதால், கடந்த ஐந்து நாள்களுக்கு முன் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், கர்ப்பிணி பெண்ணுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பிரசவத்தின்போது துரதிர்ஷ்டவசமாக தாயும், சேயும், உயிரிழந்தனர்" என்று தெரிவித்தார்.
பயண விவரம் ஏதும் இல்லாத நிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு எப்படி கரோனா வைரஸ் தொற்று பாதித்தது, என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.