தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் திருவிழா 8 நாள்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனி திருவிழா இந்த ஆண்டு வரும் ஜூலை 14 முதல் 21ஆம் தேதிவரையில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா நோய் பரவல் தேனி மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த வாரம் தேனியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நோய்த் தொற்று அதிகம் இருப்பதால் இந்த ஆண்டிற்கான கௌமாரியம்மன் கோயில் ஆனி திருவிழா ரத்து செய்யப்படுவதாக செயல் அலுவலர் அண்ணாத்துரை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “கரோனா நோய் பரவல் காரணமாக ஜூன் 30ஆம் தேதி நடைபெறவிருந்த முகூர்த்தக்கால் நடும் விழா, ஜூலை 6ஆம் தேதி நடைபெறவிருந்த கம்பம் நடுதல், அதனைத் தொடர்ந்து திருவிழா தொடக்கமாக 14ஆம் தேதி நடைபெறவிருந்த மாவிளக்கு நிகழ்ச்சி, 15ஆம் தேதி தீச்சட்டி மற்றும் விழாவின் முக்கிய நிகழ்வான 21ஆம் தேதி பால் குடம் எடுத்தல் என அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.