புதுக்கோட்டை நகராட்சி, போஸ்நகரில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி இன்று அரசின் ரூ.1000 நிவாரணத் தொகையினை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பயனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கினர்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஓரு பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 29,520 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரணத் தொகையினை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கிட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிவாரணத் தொகை பெறுவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிரமம் ஏதேனும் இருந்தால் 8838932759, 9488494679, 9788185873, 04322- 223678 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ, உதவி கிடைக்கப்பெறவில்லை எனில் மாநில மையத்தின் 18004250111 என்ற எண்ணிலோ, பேச்சுத்திறன், செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வாட்ஸ் ஆப், காணொலி காட்சி மூலம் தொடர்பு கொள்ள 9700799993 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்தார்.