அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்களுக்கு, அடுத்துவரும் பருவத்தேர்வு வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்பதால், அவர்களுக்கு விசா வழங்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, "பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு வகையான பொய் பரப்புரைகளை மேற்கொண்டு, மக்களை ஏமாற்றிவருகிறது. ஆனால், அமெரிக்கா, இந்தியா என்ற ஒரு நாடு இல்லாதது போல் நடந்துகொள்கிறது.
உலகளவில் நான்கு ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களில் மூன்று பேர் இந்தியர்கள். இருப்பினும், அமெரிக்கா ஒருதலை பட்சமாக முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் ராஜதந்திரம் எங்கே? இந்தியாவின் சூப்பர் பவர் எங்கே போனது? அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களின் துன்பங்களுக்குச் செவிசாய்க்காத மத்திய அரசு, ஆண்டுதோறும் அமெரிக்கா வழங்கும் 85 ஆயிரம் ஹெச்1பி விசாக்களில் 70 விழுக்காட்டை இந்தியா பெற்றுக்கொள்கிறது என்று பெருமை பேசுகிறது.
டொனால்ட் டிரம்பின் நண்பர் என்று அழைக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி, விசா ரத்து விவகாரம் தொடர்பான பிரச்னையை ஏன் தீர்க்கவில்லை? சர்வதேச கல்வி நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, 2018-19ஆம் ஆண்டில், அமெரிக்காவில் பத்து லட்சத்திற்கும் அதிமான இந்திய மாணவர்கள் பயின்றுவந்தனர். இது நாட்டின் மொத்த மாணவர் சமூகத்தில் சுமார் 5.5 விழுக்காடாகும்.
குவைத்தில் உள்ள 43 லட்சம் மக்கள் தொகையில், இந்தியர்கள் மட்டும் சுமார் 10 லட்சத்து 45 ஆயிரம் பேர் பல்வேறு நிறுவனங்கள், வீட்டு வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். குவைத்தின் குடியேற்ற மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், சுமார் 8 லட்சம் இந்தியர்கள் வேலையில்லாமல் நாட்டிற்குத் திரும்ப நேரிடும்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதத்திலிருந்து சுமார் 12 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கும், இந்தியாவிற்கும் எதிராகவே இருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.