மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் களமிறங்குகிறார். அங்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. நாளை மோடி வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.
இதனையடுத்து, அவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் யார் வேட்பாளராக களமிறங்குவார் என பரவலான எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. மேலும், அவரை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், வாரணாசியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் அஜய் ராய் வேட்பாளராக களமிறங்குவார் என அக்கட்சி அறிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலிலும் இதே வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து அஜய் ராய் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.