கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மாதம் ரூ. 7,500 வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் 15க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வைரஸ் தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும், விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், ஊரடங்கால் வேலையிழந்து தவித்துக் கொண்டிருக்கிற பாட்டாளி மக்கள் குடும்பங்களுக்கு மத்திய அரசு உடனடியாக 7,500 ரூபாயும், மாநில அரசு 5,000 ரூபாயும் வழங்க வேண்டும். சிறு, குறு தொழில்கள் நிறைந்த கோவை மாநகரத்தில் தொழில்கள் துவங்குவதற்கு 10 லட்சம் ரூபாய் கடன் வழங்க வேண்டும். மத்திய அரசிடம் குடிபெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்களே இல்லை, 50,000 பேர் தான் இந்தியாவில் குடிபெயர்ந்த தொழில் நடத்தி வருகிறார்கள் என்று கூறுவது பொய்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடிபெயர்ந்தோர், தொழில் நடத்தி வருகிறார்கள். அதேபோல் மருத்துவத் துறை மற்றும் சுகாதாரத்துறையில் எதிர்காலத்தில் அதிகமாக வைரஸ் தொற்று இருக்கக்கூடும் என்று கூறும் நிலையில், கரோனா பரிசோதனைகளை மேலும் வலுப்படுத்தாமல் இருப்பது ஏன், வைரஸ் பரிசோதனை செய்யாமல் கோவை மாவட்டம் பச்சை மண்டலமாக மாறி வருகிறது என்று கூறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது, என்றார்.