சென்னையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது, "கூட்டாட்சி தத்துவத்தை, ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கி வரும் மத்திய பாஜக அரசு, மாநில உரிமைகளை தொடர்ச்சியாக பறித்துவருகின்றது.
அதன் ஒருபகுதியாக, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில், கொண்டு வரும் அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கூட்டுறவு வங்கியில் நடைபெறும் முறைகேடுகளைக் களையவும், வைப்புத் தொகையாளர்களின் பாதுகாப்பையும் உறுதிபடுத்தவே அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசால் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பல ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்களாகவும் முறைகேடுகளாகவும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலமாகவே மக்கள் பணம் கொள்ளைபோய் கொண்டிருப்பது குறித்து, அக்கறைகொள்ளாத பாஜக அரசு, திடீரென மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் பக்கம், தங்கள் கவனத்தை செலுத்துவதன் நோக்கம் கூட்டுறவு வங்கிகளில் உள்ள சுமார் ரூ.5 லட்சம் கோடியை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லவே என்கிற குற்றச்சாட்டு ஏற்புடையதாகவே உள்ளது.
கூட்டுறவு வங்கிகள் ஆர்பிஐ கட்டுப்பாட்டுக்குள் செல்லும்போது, கூட்டுறவு வங்கிகளின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, அதன் நோக்கம் முற்றிலும் செயலற்றதாகிவிடும். விவசாயிகள், சிறு,குறு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சிறு கடன் உதவிகள் தடுக்கப்படும். வேளாண் காப்பீடுகள் பறிபோகும். மாநில அரசின் உதவித் திட்டம் நேரடியாக விவசாயிகளை சென்றடைவதில் தடையை ஏற்படுத்தும்.
மேலும், பேரிடர் காலத்தில்கூட மாநில அரசுகள் விவசாயிகளுக்கு வழங்கும் கடன் தள்ளுபடி சலுகை பறிபோகும் சூழல் உருவாகும். மாறாக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் வழங்கவும், அந்தக் கடன்களை வாராக்கடன்களாக அறிவிக்கவும் நிர்பந்திக்கப்படும் சூழல் உருவாகும் என்ற அச்சம் எழுகிறது.
ஏற்கெனவே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் கடன்பெறவும், கடன் தள்ளுபடி சலுகை பெறவும் பெரும் போராட்டங்களை நடத்த வேண்டிய சூழலில், கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும்போது விவசாயிகள் மிகவும் பரிதவிக்க வேண்டிய சூழலும் உருவாகும்.
அதுமட்டுமின்றி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில், இனி மத்திய அரசின் நிர்வாகத் தலையீடும் அதிகரிக்கும். இதனால் மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் சூழல் உருவாகும்.
ஆகவே, இந்த அவசர சட்டத்துக்கு தமிழ்நாடு அரசு மிக அழுத்தமான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.