பெரம்பலூர் நகர காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்தவர் பால்ராஜ். இவர் பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் பகுதியில் கல் குவாரி நடத்தி வரும், பெரம்பலூர் ராம்நகரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம், குவாரியிலிருந்து அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது வழக்கு பதியாமல் இருப்பதற்கு தனக்கு லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து, கல்குவாரி பணியாளர் ஜார்ஜ்பெர்ணாண்டஸ் என்பவர் கடந்த 20ஆம் தேதி பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்கு வந்து இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் ரூ. 50 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ஹேமசித்ரா தலைமையிலான போலீசார், ஸ்டேசனுக்குள் சென்று இன்ஸ்பெக்டர் பால்ராஜை கைது செய்தனர்.
பின்னர் திருச்சி சரக டி.ஐஜி ஆனி விஜயா காவல் ஆய்வாளர் பால்ராஜை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.