சந்தைப் பொருளாதார மதிப்பை ஐரோப்பிய நாடுகளில் சீனா இழந்துள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. பல கட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் முடித்துவைக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், பல துறைகளில் தங்களின் நிலையை ஆணித்தரமாகப் பதியவைத்திருக்கின்றன சீன முதலீடுகள். 2018-19ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து ஐந்து லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போதைய இலக்கு என்பது ஐந்தில் ஒரு பங்குதான் என்று பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தியாவிலும், சீனாவிலும் இருநாட்டுத் தொழிலதிபர்களும் பரஸ்பரம் முதலீடு செய்துள்ளனர். சீன அரசு நிறுவனங்களே மிகப்பெரும் திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன.
எனவே, இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களையோ, பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களையோ உடனடியாக வெளியேறுமாறு கூற முடியாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். உலக வர்த்தக அமைப்பு, பிற சர்வதேச நிறுவனங்களிடம் அளித்துள்ள வாக்குறுதிகள் காரணமாக, சீன முதலீடுகளைத் திரும்பப் பெறுமாறு உடனடியாகக் கூற முடியாது என்பதே உண்மை.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு பொருள்களுக்கான மூலப்பொருள்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. உதாரணமாக எல்இடி பல்புகளை இந்தியாவிலேயே தயாரித்தாலும், அதில் உள்ள 30 முதல் 40 விழுக்காடு பொருள்கள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன.
2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் சீன நிறுவனங்கள் செய்திருந்த முதலீட்டு அளவு 12 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக இருந்தது. இது மூன்று ஆண்டுகளில் 5 மடங்கு உயர்ந்து 61 ஆயிரம் கோடியாக உள்ளது.
மேலும், நடந்துவரும் எல்லை மோதல்களுக்கு மத்தியில், பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரிகள் விதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.