கரோனா நோய்த்தொற்று காரணமாக பிராய்லர் கோழி வரவு குறைந்ததையடுத்து, கோழிக்கறி விலையானது கிலோ 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் உள்ள பிராய்லர் கறிக்கோழி வணிகர்கள், கோழிக்கறியின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கொள்முதல் விலை அதிகபட்சமாக 68 ரூபாய் வரை இருக்கும் சூழலில், கடைகளில் கிலோ ஒன்றுக்கு 75 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காமயகவுண்டன்பட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட பிராய்லர் கடைகள் உள்ளன. இவற்றில் கரோனாவால் மூன்று கடைகள் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு சில கடை உரிமையாளர்கள் கோழிக்கறியின் விலையை அதிரடியாகக் குறைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த திடீர் விலை குறைப்பால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், தனிமனித இடைவெளியை மறந்து, அதிகளவில் கூடினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் காணப்படுகிறது.
உலகமே கரோனா பீதியில் உறைந்துள்ள இந்தச் சூழ்நிலையில், கோழி வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு விலை குறைப்பில் ஈடுபட்டதன் விளைவாக மக்கள் அதிகளவில் கூடியது, அப்பகுதி வாசிகளிடையே கரோனா அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.