தேனி மாவட்டம் தமிழ்நாடு–கேரள எல்லையில் அமைந்துள்ள கம்பம். இங்கிருந்து கேரள மாநிலம் இடுக்கி, பத்தினம்திட்டா, ஆலுவா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு ஆகிய மலைச்சாலைதான் முக்கிய வழித்தடமாக உள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக இந்த மூன்று வழித்தடம் வழியாக தேனி மாவட்டம் வருவபர்களை லோயர்கேம்ப், கம்பம் மெட்டு அடிவாரம், முந்தல் ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறனர்.
இந்நிலையில், ஆண்டிபட்டி கணவாய், காட்ரோடு, குமுளி ஆகிய மூன்று வழித்தடங்கள் வழியாக மட்டுமே இ-பாஸ் பெற்று மாவட்டத்திற்குள் நுழைய மாவட்ட நிர்வாகம் அனுமதித்துள்ளது. பிற வழித்தடங்கள் அனைத்தும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் மூடப்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவந்த சோதனைச்சாவடிகள் அகற்றப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கம்பம் மெட்டு மலையடிவாரத்தில் கடந்த நான்கு மாதங்களாகச் செயல்பட்டுவந்த சுகாதாரத் துறை சோதனைச்சாவடி அகற்றப்பட்டது. அங்கு சுகாதாரத் துறையினருக்காக போடப்பட்டிருந்த கூடாரம், தற்காலிக ஆண், பெண் கழிப்பறைகள், தண்ணீர் தொட்டிகள் ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.
தற்போது அங்கு காவல் துறையினர் மட்டுமே வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர். திடீரென சுகாதாரத் துறை சோதனைச்சாவடி அகற்றப்பட்டதால், பொதுமக்களிடம் கரோனா தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக வாகனங்கள் திரும்ப அனுமதியில்லை என அலுவலர்கள் தரப்பில் கூறினாலும் சரக்கு வாகனங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்த வாகனங்களில் வருபவர்களைச் சோதனை செய்ய அங்கு சுகாதாரத் துறையினர் யாரும் இல்லாததால், நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கம்பம் பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே இந்தப் பகுதியில் மருத்துவ முகாம் செயல்பட வேண்டும் அல்லது இவ்வழியாக கேரளாவிலலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் எழுந்துள்ளன.