நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தப்படியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். உற்பத்தியாகும் கேரட், பீட்ரூட் காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள 60 கேரட், பீட்ரூட் கழுவும் நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு சுத்தம் செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 500 டன் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், கேரட் கழுவ பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள கேரட் கழுவும் நிலையங்களில் சுத்திகரிப்பு எந்திரங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால், கரோனா ஊரடங்கு மற்றும் கன மழை காரணமாக சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத கேரட் கழுவும் நிலையங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடுதல் அவகாசம் தர வேண்டும், சீல் வைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை முதல் கால வரையின்றி வேலை நிறுத்தம் செய்வதாக நீலகிரி மாவட்ட கேரட் கழுவும் நிலையங்களின் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
வேலை நிறுத்தம் அறிவிப்பால் நீலகிரி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் சுத்தம் செய்து அனுப்பி வைக்கப்படும் 500 டன் கேரட், பீட்ரூட் ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.