கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், குரூப் ஏ பிரிவில் இருக்கும் பிரேசில் அணி, வெனிசுவேலா அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பிரேசில் வீரர்கள் பந்தை தன்வசப்படுத்தியே ஆடினர். இதனால், ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் கெப்ரியல் ஜிசஸ் கோல் அடித்தார். ஆனால், வீடியோ உதவி நடுவர் முறையால் (வார்) அந்த கோல் ரத்து செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மீண்டும் கோல் அடிக்க பிரேசில் வீர்ரகள் கடுமையாக முயற்சித்தனர். ஆட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், பிரேசில் வீரர் ஃபிலிப் கொடினோ கோல் அடித்தார். ஆனால், மீண்டும் வார் முறையால் அந்த கோல் நிராகரிக்கப்பட்டது. இதனால், இப்போட்டி கோலின்றி டிராவில் முடிந்ததால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இதன்மூலம், பிரேசில் அணி குரூப் ஏ பிரிவில் இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றி, ஒரு டிரா என மூன்று புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மறுமுனையில், வெனிசுவேலா அணி இரண்டு போட்டிகளிலும் டிரா செய்ததால் இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டு கோல் அடித்தும், வார் முறையால் கோல் கணக்கு எடுத்துக்கப்படாததால், பிரேசில் வீரர்களும், அவர்களது ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம், வார் உதவியால் வெனிசுவேலா அணி இப்போட்டியில் தோல்வி அடையமால் இருந்தது.