திருப்பூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் நினைவு நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று(ஜூலை 11) நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தற்போது இந்திய அளவில் கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரராக பிரதமர் மோடி திகழ்கிறார்.
அந்த அளவிற்கு ஏராளமான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதுவரை இல்லாத வகையில், மத்திய அரசு உத்தரவாதத்தை கொடுத்து சிறு குறு தொழில்களுக்கு 20 விழுக்காடு கடன் வழங்க வேண்டும் என்ற நிலையை அவரே ஏற்படுத்தியுள்ளார். விவசாயிகளின் நிலை முன்னெப்போதும் இல்லாத வகையில், பாதுகாப்பானதாக மாற்றப்பட்டிருக்கிறது.
புதிய நம்பிக்கையை உருவாக்குபவராக பிரதமர் மோடி இருக்கிறார். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சியாக இல்லாமல் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதாக விளங்க வேண்டும்.
அரசின் முயற்சிக்கு எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது.
இதில் யாரையும் குறை சொல்லமுடியாது. சுகாதார அமைச்சர் முதல் கடைநிலை பணியாளர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பலரும் மக்களுக்கு செய்த உதவிக்கு சாட்சிதான் பல அமைச்சர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்" என்றார்.