கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாரத் சேனா நிறுவனத் தலைவர் செந்தில் கண்ணன் கூறியதாவது, "கடந்த வாரம் கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது அவமதிப்பு நடத்தியதற்காக பாரத் சேனா தெற்கு மாவட்ட அமைப்பாளரான அருண்கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
அருண் கிருஷ்ணர் அவ்வாறு செய்ததை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் இதுபோன்ற எதிர்வினைகள் நடக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் சிலையை அவமதித்தது தவறு என்றால் தமிழ் கடவுளான முருக கடவுளின் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததும் தவறு.
அதுமட்டுமின்றி திமுக, காங்கிரஸ், மக்கள் முன்னேற்ற கழகம், மதிமுக, நாம் தமிழர் கட்சி போன்ற கழகத்தினர் இந்து இறையாண்மைக்கு எதிராக செயல்படுகின்றன. இந்து மக்கள் யாரும் வருகின்ற தேர்தலில் அவர்களுக்கு வாக்களிக்க கூடாது, தமிழ்நாடு என்பது பெரியார் மண்ணல்ல நாயன்மார்களும் ஆழ்வார்களும் வாழ்ந்த மண்.
இதை எப்பொழுதும் பெரியார் மண்ணாக மாற்ற நாங்கள் விடமாட்டோம். தற்பொழுது திமுகவின் செயல்பாடுகள் எல்லாம் இந்து மதத்திற்கு எதிராக உள்ளது. எனவே இந்து மதத்திற்கு ஆதரவாக நாங்கள் எந்த முடிவையும் சந்திக்க தயாராக உள்ளோம்.
பெரியார் சிலை அவமதிப்பு விஷயத்திற்கு கந்த சஷ்டி கவசம் அவமதிப்பு தான் முதல் காரணம். எனவே யார் வினையாற்றினாலும் அதற்கு எதிர்வினை உண்டு. கந்தசஷ்டிகவசம் அவமதிப்பு விவகாரத்தில் தற்போதுள்ள தமிழ்நாடு அரசும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வருத்தமாக உள்ளது.
எனவே அதிமுகவையும் கண்டிக்கின்றோம். எங்கள் அமைப்பை பொறுத்தவரை இந்துக்களுக்கு தான் முன்னுரிமை, இந்துக்கள்தான் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். இந்துக்கள் தான் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.
பாரதிய ஜனதாவுடன் எங்களது கூட்டணி இருப்பினும் எங்களது கருத்துக்கள் என்பது இந்துக்களுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதாகும். திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் ஒரு நிலைப்பாடும் வெளியில் மக்கள் முன்பு ஒரு நிலைப்பாடும் கொண்டுள்ளார். இதை கண்டிக்கிறோம். அதுமட்டுமின்றி வைக்கோ சீமான் போன்றவர்களையும் கண்டிக்கிறோம்” என்றுத் தெரிவித்தார்.