சென்னையை அடுத்துள்ள திருநின்றவூர், கொசவன்பாளையத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் பரமகுரு. இவர் கடந்த சில நாள்களுக்கு முன் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்பாக தமிழ்நாடு டி.ஜி.பி., சென்னை காவல் துறை ஆணையர் ஆகியோருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ”வழக்கறிஞர் பரமகுரு சென்னை உயர் நீதிமன்றத்திலும், திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றங்களிலும் பல வழக்குகளில் ஆஜராகி வந்திருக்கிறார். அவருக்கு சிறு குழந்தைகள் உள்ளனர். அவரை கொடூரமாக படுகொலை செய்த கும்பலை விரைந்து கைது செய்து அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவேண்டும்.
வழக்கின் புலன் விசாரணையை விரைவாக முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனையை விரைவாக பெற்றுத்தர காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அண்மை காலங்களாக தமிழ்நாடு முழுவதும் பல வழக்கறிஞர்கள் கொடூரமாக தாக்கப்படுகின்றனர். அதில் சிலர் படுகொலையும் செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாத அளவுக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே, வழக்கறிஞர்களுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கும் தமிழ்நாடு காவல் துறை தலைவர் உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.