திருவண்ணாமலை நகரில் உள்ள போத்தராஜா கோயில் தெருவில், ஆசியா பிளாஸ்டிக் என்ற பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் அங்காடியை ஆசிப் என்பவர் நடத்திவருகிறார்.
இந்நிலையில், ஆசிப்பிற்கு சொந்தமான குடோனில் பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கி வைப்பதற்காக, வெளியூரிலிருந்து லாரியில் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் லாரியில் கொண்டு வரப்பட்டன.
இது குறித்து தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள் ஆல்பர்ட், வினோத்குமார் ஆகியோர் கல்குதிரை தக்கா தெருவில் உள்ள குடோனுக்குச் சென்று, லாரியில் கொண்டுவரப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து லாரியையும் கைப்பற்றினர். இதனையடுத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் மதிப்பு ஏழு லட்சம் ரூபாய் இருக்கும் என்று கடைக்காரர் தெரிவித்துள்ளார். எனினும், கைப்பற்றப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை எடைபோட்டு பார்த்த பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும். அதற்குப் பின்னர்தான் கடை உரிமையாளர் ஆசிப்புக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பதும் தெரிவிக்கப்படும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:குப்பைக் கதை! கரோனாவால் கலங்கும் 'கந்தல் சேகரிப்பாளர்கள்'