இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தருமபுரி மாவட்டத்தில் ‘விராசாத் மரபு உரிமை’ என்ற கடன் திட்டம் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் 2020-21ஆம் ஆண்டுமுதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தைச் சார்ந்தவர்களான முஸ்லிம், கிறிஸ்தவர், ஜெயின், சீக்கியர், பார்சி, புத்த மதம் ஆகியவற்றைச் சார்ந்த மரபுவழி கைவினைக் கலைஞர்களுக்கு உதவிடும் வகையில் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையினர் கைவினைக் கலைஞர்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் 98 ஆயிரம் ரூபாய், நகர்ப்புறத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக 10 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். நிதி திட்டத்தின்கீழ் கடன் உதவி பெறும் ஆண் பயனாளிகள் 5 விழுக்காடு மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4 விழுக்காடு வட்டி விகிதத்தில் கடன் உதவி வழங்கப்படும் .
கடன் உதவிகளை 5 ஆண்டுக்குள் திரும்ப செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.