திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மேல்மலை, வில்பட்டி கிராமங்களில் பல ஏககர் பரப்பளவில் மலைப்பூண்டு விவசாயம் செய்யப்பட்டுவருகிறது.
இந்த மலைப் பூண்டுகள் மருத்துவ குணம் கொண்டவை என்பதால் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களில் விளையும் பூண்டுகளைவிட கொடைக்கானல் மலைப் பூண்டு தனித்துவம் வாய்ந்தது. இதன் காரணமாக கொடைக்கானலில் விளையும் பூண்டிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
இங்கு விளையும் மலைப் பூண்டுக்கு அதிக காரத்தன்மை உண்டு. இந்த மலைப் பூண்டுகளை விளைச்சல் செய்து அறுவடை செய்வதற்கு சுமார் 3 மாதம் முதல் 5 மாதங்கள் தேவைப்படுகின்றன. மேலும், மலைவாழ் மக்களின் பணப்பயிராக கருதப்படுவதனால் மேல்மலை கிராமங்களில் அதிக அளவில் மலைப் பூண்டுகளைப் பயிரிட்டுவருகின்றனர்.
தற்போது கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அவ்வப்போது மிதமாக சாரல் மழை பெய்துவருவதால் மலைப்பூண்டு நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடை பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வருடம் மலைப் பூண்டு 260 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுவதாக மலைவாழ் விவசாயிகள் கூறுகின்றனர்.