தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிகளை மீறி, கடை திறந்ததாகக்கூறி காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், அவர்கள் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தனர்.
நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 5 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் சாத்தான்குளம் சென்று ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக அவர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் புகைப்படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறுகையில்," இந்த துயரமான சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இந்த சம்பவம் குறித்த எல்லாவற்றையும் ஆரம்பத்திலிருந்தே நான் கவனித்து வருகிறேன். நான் இந்த குடும்பத்தில் மூத்த மகனாக இருந்து, அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறேன்.
அந்த வகையில், தற்போதைய செலவிற்காக ரூ.5 லட்சம் ரூபாய் தந்திருக்கிறேன். தவறு செய்தவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள். நீதிமன்றம் தானாக முன்வந்து, இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அதன்மூலம் நிச்சயமாக நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்றார்.